அண்ணாமலை இல்லாமலேயே பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம் தொடங்கி உள்ளது. இது, பல்வேறு தரப்பிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஞாயிற்று கிழமை டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். இதனையடுத்து, அங்கு யாரையும் சந்திக்கவில்லை எனவும், காத்திருக்க வைக்கப்பட்டார் எனவும் கூறப்படுகிறது.
அதன் பின்னர், அடுத்த நாள் அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். இந்த சந்திப்பில், பாஜக, அதிமுக கூட்டணி முறிவு குறித்து பேசப்பட்டதாகவும், பாஜகவின் நிலைப்பாடு குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே, நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு பாஜக தலைவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இதில், பாஜகவின் உண்மை பலம் என்ன…? அதிமுகவுடன் கூட்டணி வைக்காமல் என்ன நடக்கும்…? தனியாக நிற்கும் பட்சத்தில் வாக்கு வங்கி எப்படி இருக்கும்? பாஜக தலைமையில் தனியாக கூட்டணி அமைத்தால் யாரெல்லாம் கூட்டணியில் இணைவார்கள் என்ற ரிப்போர்ட்டை தயாரித்து கொடுத்துள்ளார்.
இந்த நிலையில், அண்ணாமலையின் நடைபயணம் தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது, அண்ணாமலைக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னை, சோழிங்கநல்லூரில் உள்ள குலோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால், அக்டோபர் 6ம் தேதி நடைபெறவிருந்த பாதயாத்திரை வரும் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அண்ணாமலை தலைமையில் நடைபெற இருந்த மாவட்ட தலைவர்களின் கூட்டம் இன்று அண்ணாமலை இல்லாமலேயே தொடங்கியது. நீண்ட நேரம் ஆகியும் அண்ணாமலை வராததால், கேசவ விநாயகம், எச்.ராஜா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் வந்தே மாதரம் பாடல் பாடி கூட்டத்தை தொடங்கினர்.
மேலும், இந்த கூட்டத்தில் கூட்டணி குறித்தும், தேர்தல் பணிகள் குறித்தும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அலோசனை மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் அண்ணாமலை இல்லாமலேயே பெருங்கோட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தை நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இன்னொரு பக்கம் அண்ணாமலையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு இடது பக்க நுரையீரலில் சளி கோர்த்து இருப்பதாகவும், சுவாசப்பாதையில், வைரஸ் கிருமி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் விளைவாக சுவாசப்பாதை இறுக்கமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதற்காக சில மருந்துகளை ஒரு வாரத்திற்கு பரிந்துரை செய்துள்ளதாகவும், ஐந்து நாட்களுக்குப் பின், மீண்டும் மருத்துவ பரிசோதனை செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவர் முழுமையாக குணமடைய இரண்டு வாரம் ஓய்வு எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இந்த கூட்டத்தில், பேசிய கேசவ விநாயகம், தமிழகத்தில் இதற்கு முன் பாஜக பலமுறை தனித்து போட்டியிட்டுள்ளது எனவும், அனைத்தையும் எதிர்கொள்ள தயார் எனவும், மாவட்ட தலைவர்களை டெல்லி தலைமை கண்காணித்து கொண்டிருக்கிறது என கூறியுள்ளார்.
தொடர்ந்து அண்ணாமலைக்கு அடுத்தடுத்து நெருக்கடிகள் ஏற்பட்டு, சிக்கலில் உள்ளார். எனவே பாஜகவின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்குமென பார்ப்போம்.
