விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி‘ தொடரின் மூலம் பிரபலமானவர் நடிகர் கவின். இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 3‘ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றார். இதனால் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்த நிலையில், படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘லிப்ட், டாடா‘ படங்கள் பெரும் வெற்றியை பெற்றது. இப்படங்களை தொடர்ந்து தற்போது இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் இவர் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இதற்கிடையே இவர் கடந்த 2019-ல் நடைபெற்ற ‘பிக் பாஸ் சீசன் 3‘ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது அதில் மற்றுமொரு போட்டியாளராகக் கலந்து கொண்ட இலங்கைத் தமிழ்ப் பெண்ணான லாஸ்லியாவைக் காதலிப்பதாக பரபரப்பு எழுந்தது. ஆனால் நிகழ்ச்சியை விட்டு வெளியில் வந்த பின் இருவரும் அவரவர் சினிமாவில் பிஸியாக நடிக்க தொடங்கிவிட்டனர். இந்நிலையில் இந்த மாதம் நடிகர் கவினுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியானது. அதை தற்போது உறுதிப்படுத்தும் வகையில் கவின் தரப்பிலேயே அறிவித்துள்ளனர்.
அந்த வகையில் தனியார் பள்ளியில் பணியாற்றி வரும் மோனிகா என்பவரை காதலித்து வந்தார் கவின். ரகசியமான இவர்களின் காதல் தற்போது இருவீட்டார் சம்மதத்துடன் திருமண கட்டத்தை எட்டியுள்ளது. இவர்களின் திருமணம் வரும் ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது.
