இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘மாவீரன்‘. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து சரிதா, யோகி பாபு, மிஷ்கின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான நிலையில், நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் வெளியாகியுள்ளது. தெலுங்கில் ‘மாவீருடு‘ என்று பெயர் வைத்துள்ளனர். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், ‘மாவீரன்‘ திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து இயக்குனர் ஷங்கர் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “ மாவீரன் திரைப்படம் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. இயக்குனர் மடோன் அஸ்வினின் திறமை சினிமாவில் நிலைத்து நிற்பார் என்பதை காட்டுகிறது. மாவீரன் மாஸான சிறந்த பொழுதுபோக்கு படம். சிவகார்த்திகேயன் பாராட்டுக்குரிய நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதிதி கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார். இயக்குனர் மிஷ்கின், நடிகை சரிதா, யோகிபாபு சிறப்பாக நடித்துள்ளனர் “ என்று பதிவிட்டுள்ளார்.
