இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘மாமன்னன்‘. இதில் பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படத்தின் வெற்றிக்காக ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜ்க்கு மினி கூப்பர் காரை பரிசளித்தனர்.
இந்நிலையில் இப்படம் ஜூலை 27-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி அதிலும் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், ‘மாமன்னன்‘ திரைப்படம் பார்த்துவிட்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமூக வளைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “ நான் பார்ட்டிக்கு தாமதமாக வந்துள்ளேன். மாமன்னன் மிகவும் சிறந்த திரைப்படம். படக்குழுவினர் அனைவரும் நன்றாக வேலை பார்த்துள்ளனர். படத்தின் தாக்கத்திலிருந்து இன்னும் நான் மீளவில்லை. உதயநிதி ஸ்டாலின், மாரி செல்வராஜ், ஏ.ஆர்.ரஹ்மான், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் அனைவருக்கும் வாழ்த்துக்கள்“ என்று பதிவிட்டுள்ளார்.
