தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் மகேஷ்பாபு தற்போது இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். அவரது 28-வது படமாக உருவாகி வரும் இந்த படத்தில் கதாநாயகிகளாக பூஜா ஹெக்டே மற்றும் சம்யுக்தா இருவரும் நடித்து வருகின்றனர். தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகர் ஜெயராம் இணைந்துள்ளார்.
படப்பிடிப்பு தளத்தில் மகேஷ்பாபு மற்றும் இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார் நடிகர் ஜெயராம். இப்படத்தில் நடிப்பது குறித்து ஜெயராம் கூறும்போது, “மகேஷ்பாபுவின் தந்தை நடிகர் கிருஷ்ணாவின் படங்களை பார்த்து வளர்ந்தவன் நான்.
இப்போது மகேஷ்பாபு உடனேயே இணைந்து பணியாற்றி வருவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுமட்டுமல்ல, என்னுடைய நெருங்கிய நண்பரான திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸுடன் மீண்டும் இணைந்து பணிபுரிவதிலும் மகிழ்ச்சி“ என்று நடிகர் ஜெயராம் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அங்கே இளம் முன்னணி நடிகர்களாக வலம் வரும் அல்லு அர்ஜுன், பிரபாஸ் ஆகியோரிடம் இணைந்து நடித்த ஜெயராம் தற்போது ராம்சரண், ரவிதேஜா ஆகியோரின் படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
