‘தன் வினை தன்னை சுடும்’ என்கிற வரிகள், வெறும் பழமொழிகள் மட்டுமல்ல, நடைமுறை வாழ்க்கையில் பெரிதும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய வரிகள்தான். இதுபோன்ற ஒரு சம்பவம் தற்போதைய நிலையில் நடந்தேறி இருப்பது, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசுக்கு ஏற்பட்டிருக்க கூடிய பெரும் அதிர்ச்சியாகவே, பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசிய விவாகரம் தமிழகம் மட்டுமல்ல, இந்திய அளவில் பெரும் அதிர்வலையை உருவாக்கி இருந்தது. மத்தியில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள INDI கூட்டணியிலும் பிளவை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தமிழகம் இந்திய அளவில் எதிரொலித்தது. தேசிய அரசியலில் கவனம் செலுத்தி வரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கனவுக்கும் கொள்ளி வைப்பதாகவே பார்க்கப்பட்டது. காரணம், INDI கூட்டணில் இருக்க கூடிய வடமாநில தலைவர்களை பொறுத்தவரை சனாதன கொள்கையில் பயணிப்பவர்களாக இருக்க கூடியதும், சனாதன எதிர்ப்பு குறித்து பேசிய ஒரு கட்சி, இந்திய கூட்டணியில் இடம்பெற்று இருப்பது, வடமாநிலங்களில் நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்ல, சட்டமன்ற தேர்தலிலும் பெரும் பின்னடவை உருவாக்கும் என்பதுதான்,
இப்படியான நிலையில் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு, ஆ.ராசா ஆகியோருக்கு எதிராக கோ வாரண்டோ வழக்கும் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில், சனாதன ஒழிப்பு மாநாடு போல் திராவிட கொள்கை எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு திருவேற்காட்டை சேர்ந்த ஒருவர் சென்னை உயர்மன்றத்தில் அதிரடியாக வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், அதிர்ச்சியடைந்தார். காரணம் இப்படியே ஒழிப்பு, அழிப்பு மாநாடுகள், கூட்டங்கள் நடந்தால் இந்தியா என்கிற நாடே குட்டிச்சுவராகி விடும் என்பதை உணர்ந்தவர், சனாதான ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்டு பேசியதன் விளைவாகவே தற்போது திராவிட கொள்கைக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு வழக்கு தொடரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆட்சியில், அதிகாரத்தில் உள்ளவர்கள், பொது நிகழ்ச்சிகளில் பேசும் போது சாதி, மதம், மொழி, இனம், கொள்கை ரீதியாக பிளவு ஏற்படாத வகையில் எச்சரிக்கை உணர்வுடன் பேச வேண்டும்.’ என அறிவுறுத்தலை முன் வைத்த நீதியரசர்.
‘குறிப்பிட்ட கொள்கையை ஒழிக்க வேண்டும் என பேசுவதற்கு பதிலாக, மக்கள் வாழ்க்கையை நாசம் செய்யும், அழிக்கும் மது உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிப்பதில் திமுக அமைச்சர்கள் கவனம் செலுத்த வேண்டும். எந்த மதத்திற்கு எதிராக பேசுவதையும் நீதிமன்றம் ஒருபோதும் அனுமதிக்காது. சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மெத்தனப்போக்கோடு விட்டது தமிழக காவல்துறை தங்களுடைய கடமையை புறக்கணித்து போன்றது. சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட, உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஆகிய இரண்டு அமைச்சர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து இருந்திருக்க வேண்டும்’’ என கடுமையாக சாட்டையை சுழற்றியவர், தற்போது திராவிட கொள்கைக்கு எதிரான கூட்டத்திற்கான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறார்.
