பறவை காய்ச்சல் பரவி வரவதால், கறிக்கோழிகள் தமிழகத்துக்குள் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மழைக்காலம், குளிர்க்காலம், கோடைக்காலம் என எந்த காலங்கள் வந்தாலும், மனிதனுக்கு ஏதாவது ஒரு நோய் உருவாகி வருகிறது. டெங்கு, சிக்குன் குன்யா, டைபாய்டு, மலேரியா உள்பட பல்வேறு மர்ம காய்ச்சலால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். அதேபோல் கால்நடைகள் மற்றும் விலங்குகளுக்கு நோய்கள் தாக்கப்படுவதால், மற்ற விலங்குகளுக்கு பரவும் நிலையும் உள்ளது. இதனால், மாமிச உணவு சாப்பிடும் மக்களுக்கு, உடல்நிலை கோளாறு ஏற்படும் அபாயமும் உள்ளது.
இந்தவேளையில், கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால், அங்குள்ள மக்கள் கடும் சிரமம் அடைந்துள்ளனர். குறிப்பாக கோழி பண்ணை வைத்துள்ளவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரள மாநிலம் கோட்டயம், ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அரசு உத்தரவின் பேரில் கோட்டயம், ஆலப்புழா மாவட்டங்களில் உள்ள கோழி, வாத்து பண்ணைகளில் சுகாதாரம் மற்றும் கால்நடை துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு இருந்த 8 ஆயிரம் கோழி மற்றும் வாத்துகளை அழித்தனர்.
இதற்கிடையே பறவை காய்ச்சல் பரவாமல் இருக்க பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பண்ணைகளில் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.
கோட்டயம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா வாகனங்கள், சரக்கு லாரிகள் கூடலூர் வழியாக கர்நாடகா மற்றும் ஊட்டிக்கு சென்று வருகின்றன. இதனால் நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க மாநில எல்லைகள் வழியாக வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தி கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.
கூடலூர் பகுதியில் நாடுகாணி, பாட்டவயல், சோலாடி, நம்பியார்குன்னு உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளிலும் கால்நடை பராமரிப்புத்துறையினர் முகாமிட்டு கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கின்றனர்.
மேலும், வயநாடு பகுதியில் இருந்து எருமை உள்பட சுற்றுவட்டார கிராமங்களுக்கு கறிக்கோழிகள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் லவ் பேர்ட்ஸ் உள்ளிட்ட பறவை இனங்களை எடுத்து வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர். கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பண்ணைகளிலும் கால்நடை பராமரிப்புத்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
