முகப்பு அண்மை செய்திகள் ஆவின் நெய் விலை மீண்டும் உயர்வு – ஜி.கே.வாசன் கொந்தளிப்பு

ஆவின் நெய் விலை மீண்டும் உயர்வு – ஜி.கே.வாசன் கொந்தளிப்பு

தமிழகத்தில் ஆவின் நெய் விலை மீண்டும் உயர்த்தியதற்கு, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கொந்தளித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் ஆவின் பொருட்களின் விலையை தமிழக அரசு உயர்த்தியது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், குறைந்த விலையை உயர்த்துவதாக அறிவித்தது.

இந்நிலையில், மீண்டும் ஆவின் தயாரிப்புகளில் ஒன்றான நெய் விலையை அரசு உயர்த்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தமிழக அரசு ஓரிரு மாதங்களுக்கு முன்னர், ஏழை, எளிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பால் விலையையும், பால் பொருட்களின் விலையையும் உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றியது. தற்போது திடீரென இந்த மாதமும், அடுத்த மாதமும் பண்டிகை கால மாதம் என்பதை உணராமல், ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் அதிகமாக பயன்படுத்தும் நெய் விலையை அரசு உயர்த்தி மக்கள் மீது மேலும் சுமையை ஏற்றியுள்ளது.

பண்டிகை காலங்களில் மக்கள் நெய்யை அதிகம் பயன்படுத்துவார்கள் என தெரிந்தே அதன் விலையை உயர்த்தியது, தமிழக அரசு, மக்களின் நலனில் அக்கறை இல்லாமல், வருமானத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுவதாக தெரிகிறது.

அடுத்த மாதம் பொங்கல் பண்டிகை வருவதை முன்னிட்டு ஆண்டு தோறும் வழங்கப்படும் பொங்கல் தொகுப்பை தாமதம் இல்லாமல் வழங்க வேண்டும். அதற்கான பொருள்களில் விவசாயிகளிடம் இருந்து கரும்பு மற்றும் வெல்லம், பருப்பு வகைகளை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.

மேலும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள தரமான பொங்கல் தொகுப்பை அரசு வழங்க வேண்டும். குறிப்பாக மக்களை நேரடியாக பாதிக்கும் நெய் விலை உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version