ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளிவந்த கன்னடப் படம் ‘காந்தாரா‘. கர்நாடகாவில் பெரும் வெற்றி பெற்றது. பின்னர் 2 வாரங்களுக்குப் பிறகு தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. உலகம் முழுவதும் 400 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்த இந்தப் படம், 100 நாட்களைக் கடந்துள்ளது. அது குறித்து 100 நாள் போஸ்டர்களை வெளியிட்டு படத்தைக் தயாரித்த ஹாமபேல் பிலிம்ஸ் நிறுவனம், “நாம் எப்போதும் போற்றும் ஒரு திரைப்படம் மீண்டும் நம் வேர்களுக்கு அழைத்துச் சென்று, நம் பாரம்பரியங்கள் மீது நமக்கு பிரமிப்பைத் தந்தது. அதை நிறைவேற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்“, எனக் குறிப்பிட்டுள்ளது.
கர்நாடகாவில் சுமார் 40 தியேட்டர்களில் இப்படம் 100 நாட்களைக் கடந்து சாதனையை படைத்து வருகிறது. மேலும் ஓடிடியில் வெளியான பிறகும் தியேட்டர்களில் ஓடி 100 நாட்களைக் கடந்துள்ளது குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.
