இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது தமிழ் சினிமாவில் பரபரப்பான இயக்குனராக உருவெடுத்துள்ளார். இவர் இயக்கிய ‘பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன்‘ படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இந்த இரண்டு படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்த இவருக்கு படவாய்ப்புகள் குவிந்தன.
துருவ் விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்க முடிவெடுத்த மாரி செல்வராஜிற்கு தனுஷின் தயாரிப்பில் அவரை வைத்து ஒரு படத்தை இயக்கவும் வாய்ப்பு வந்தது. ஆனால் உதயநிதி, மாரி செல்வராஜுடன் இணைந்து படம் பண்ண வேண்டும் என்றும், அப்படம் தான் உதயநிதியின் கடைசி படமாக இருக்க வேண்டும் என்றும் அவர் ஆசைப்பட்டதால், மாரி செல்வராஜ் மற்ற படங்களை விட்டுவிட்டு உதயநிதியின் படத்தை இயக்க சென்றார்.
இந்த நிலையில் இவர்கள் கூட்டணியில் உருவான ‘மாமன்னன்‘ திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து வருகிறது. இதில் உதயநிதியுடன் இணைந்து வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிறந்த சமூக கருத்தை கொண்டு இப்படம் உருவாகியுள்ளதாக படம் பார்த்த அனைவரும் மாரி செல்வராஜை பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்ட உதயநிதி படத்தை பற்றியும் மாரி செல்வராஜுடன் பணியாற்றியதை பற்றியும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் கூறியதாவது, “ ‘மாமன்னன்‘ படம் தான் என் கடைசி படம் என அனைவரிடமும் கூறினேன். மாரி செல்வராஜும் இது என் கடைசி படம் என்பதால் மற்ற படங்களை விட்டுவிட்டு எனக்காக ‘மாமன்னன்‘ படத்தை இயக்க சம்மதித்தார். இதையடுத்து ‘மாமன்னன்‘ படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக கமல் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. கதையும் அருமையாக இருந்தது. எனவே மாரி செல்வராஜிடம் சென்று, இதுபோல ஒரு அருமையான கதை கிடைத்துள்ளது. இன்னொரு படத்தில் நான் நடிக்கலாம் என இருக்கேன் என்றேன்.
இதைக்கேட்டதும் மாரி செல்வராஜ் கடுமையான கோபத்திற்கு ஆளானார். அப்போ என்னிடம் பொய் சொன்னீங்களா? எனக்கு அதெல்லாம் தெரியாது, இதுதான் உங்க கடைசி படம், இதன் பிறகு நீங்க நடிக்கக்கூடாது “ என மாரி செல்வராஜ் கூறியதாக உதயநிதி ஜாலியாக அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
