விமானங்களின் இயக்கத்தை அதிகரிக்கக் கூடுதலாக 900 விமானிகள் மற்றும் 4,200 விமானப் பணிப்பெண்களைப் பணியில் அமர்த்த உள்ளதாக டாடா குழுமத்துக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தை சர்வதேச அளவில் விரிவுப்படுத்துவதே முக்கிய இலக்கு என டாடா குழுமம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஏர்பஸ் நிறுவனம் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த போயிங் நிறுவனத்திடம் இருந்து 470 பயணிகள் விமானங்களை வாங்குவதற்கு டாடா குழுமம் ஒப்பந்தம் செய்துள்ளது. மத்திய அரசிடம் இருந்து ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் கைப்பற்றியதில் இருந்து பல்வேறு அதிரடி மாற்றங்களை டாடா நிறுவனம் வருவாய் ரீதியில் ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக, ஏர் இந்தியா நிறுவனம், உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் விமான சேவைகளை விரிவுப்படுத்தியுள்ளது. பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்து அமெரிக்காவுக்கு மற்ற விமான நிறுவனங்களைக் காட்டிலும், குறைந்தக் கட்டணத்தில் ஏர் இந்தியா நிறுவனம் நேரடி விமான சேவைகளை வழங்கி வருகிறது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் வரை 285 விமானிகளையும், 1,900 பணிப்பெண்களையும் வேலைக்கு எடுத்துள்ளது ஏர் இந்தியா நிறுவனம்.
அவ்வப்போது, விமானப் பயண டிக்கெட்டுகளில் அதிரடி சலுகைகளை ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து வழங்கி வருவதால், அந்நிறுவன விமானங்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
