முகப்பு அண்மை செய்திகள் பிரதமரின் தந்தைப் பெயரை மாற்றிக் கூறிய விவகாரம்- பவன் கேராவுக்கு இடைக்கால பிணை வழங்கிய உச்சநீதிமன்றம்!

பிரதமரின் தந்தைப் பெயரை மாற்றிக் கூறிய விவகாரம்- பவன் கேராவுக்கு இடைக்கால பிணை வழங்கிய உச்சநீதிமன்றம்!

பிரதமர் நரேந்திர மோடியின் தந்தைப் பெயரை மாற்றிக் கூறிய விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேராவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

நரேந்திர தாமோதரதாஸ் மோடி என்ற பிரதமரின் பெயரை அதானி விவகாரத்துடன் இணைத்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன.

இந்த நிலையில், பவன் கேராவை கைது செய்யக்கோரி அசாம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. இதில், அசாம் மாநிலத்தில் பதிவுச் செய்யப்பட்ட வழக்கில் டெல்லி விமான நிலையத்தில் இருந்து ராய்ப்பூர் செல்லவிருந்த பவன் கேரா தடுத்து நிறுத்தப்பட்டு, அசாம் மாநில காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

இதற்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி உடனடியாக முறையீடு செய்த நிலையில், அவசர வழக்காக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வாதங்களைக் கேட்ட பிறகு தலைமை நீதிபதி அமர்வு, பவன் கேரா மீது பதியப்பட்டுள்ள பல்வேறு வழக்குகளை ஒன்றிணைக்கக் கூடிய மனு மீதும் முதல் தகவல் அறிக்கையை ரத்துச் செய்யக் கூடிய மனு மீதும் பதிலளிக்க அசாம் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநில காவல்துறைக்கு நோட்டீஸ் பிறப்பித்தனர்.

மேலும், அனைத்து வழக்குகளும் ஒன்றிணைக்கப்பட்டு, மறு விசாரணைக்கு பட்டியலிடும் வரை பவன் கேராவுக்கு இடைக்கால பிணை வழங்க டெல்லி நீதிமன்றத்துக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் மீண்டும் இந்த வழக்கை வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version