பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் நிறைவடைவதை ஒட்டி, பாஜகவின் அடுத்த தேசிய தலைவர் யார் என்கிற கேள்விகள் பாஜக மட்டத்தில் மட்டுமில்லாமல், இந்தியா முழுவதிலும் அலையடித்துக் கொண்டிருந்தது. காரணம் தொடர்ந்து இரண்டு முறை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிவாகை சூடியிருக்க கூடிய பாஜக, மூன்றாவது முறை வெற்றிபெற வைக்கக் கூடிய ஒரு தலைவரையே தேர்வு செய்யும் என்கிற எதிர்பார்ப்புத்தான்.
அப்படி அடுத்த தலைவர் யார்? அல்லது தற்போதைய தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவே தொடரப்போகிறாரா என்கிற கேள்விகள் எழுந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது, பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம்.
நாடாளுமன்றத் தேர்தல் 2024-ம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்கவுள்ளது. இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கர்நாடகம் உள்பட 9 மாநிலங்களில் நடக்க இருக்க கூடிய சட்டமன்றத் தேர்தல்கள் பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலையில மத்தியில் ஆளும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. தேர்தலை மையப்படுத்தியே அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் இருந்து வருகின்றன. இந்த தேர்தல்களைச் சந்திப்பதற்கு, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியும் வேகமெடுக்கத் துவங்கிவிட்டது.
இதையொட்டிய யுக்திகள், திட்டங்கள் வகுப்பதற்காக அந்த கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் தலைநகர் டெல்லியில் இந்த மாதம் 16, 17-ம் தேதிகளில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜகவின் முக்கிய தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் பதவிக்காலம் வரும் 2024-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
