ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கடந்த புதன்கிழமையன்று நடைபெற்ற தெலுங்கு தேசம் கட்சி பேரணி நெரிசலில் உயிரிழந்த 8 பேர் குடும்பத்திற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிவாரண உதவித் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா மொத்தம் ரூ. 28 லட்சம் நிவாரண உதவி கிடைக்கும்.
நெல்லூர் அருகே உள்ள பாமூரு பகுதியில் கடந்த புதன்கிழமை தெலுங்கு தேசம் கட்சி பிரமாண்டமான பேரணி நடத்தியது. அதில் கலந்து கொண்ட தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவைப் பார்க்க கூட்டத்தினரிடையே ஏற்பட்ட நெரிசலில் அருகிலிருந்த கால்வாயில் 8 பேர் விழுந்து இறந்தனர்.
இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா பத்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று சந்திரபாபு நாயுடு ஏற்கனவே அறிவித்திருந்தார். இப்போது இத்தொகை மேலும் உயர்த்தப்பட்டு ரூ. 24 லட்சமாக வழங்கப்படும் என்று அவர் கூறினார். இதில் கட்சியின் சார்பில் ரூ. 15 லட்சம் வழங்கப்படும். கட்சியில் உள்ள மற்ற தலைவர்கள் ரூ.9 லட்சம் வழங்க முன்வந்துள்ளனர் என்று சந்திரபாபு நாயுடு அளித்த பேட்டி ஒன்றில் கூறினார். இது தவிர, இறந்தவர்களின் வீட்டுக் குழந்தைகளைக், கட்சியின் சார்பில் படிக்க வைப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த நிவாரண உதவி தவிர, இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் பிரதமர் நிவாரண உதவி நிதியிலிருந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆந்திர மாநில அரசு தலா இரண்டு லட்சம் வழங்கும் என்று முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஆகவே, பேரணியில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா மொத்தம் 28 லட்சம் ரூபாய் நிவாரண உதவி கிடைக்கும்.
