தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் அஜித்துக்கு மிக பெரிய ரசிகர் படை உள்ளது. அவரது படங்கள் வெளியாகும் போது ரசிகர்கள் கொண்டாட்டமாக பேனர், கட் அவுட் வைத்துக் கொண்டாடுவார்கள்.
ஆனால், அஜித்தின் தீவிர ரசிகர் ஒருவர்அவரது ஒவ்வொரு படமும் ரிலீசாகும் போது வித்தியாசமான அணுகுமுறையைக் கடைபிடித்து வருகிறார். தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் என்கிற அந்த ரசிகர்,‘வீரம்’படம் என்ற பெயரில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். அஜித்தின்‘வலிமை’படம் வெளியானபோது தனது உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு அதிக அளவில் ஆஃபர்கள் கொடுத்து அசத்தி இருந்தார்.
அதேபோல, ‘துணிவு’திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானபோது வீரம் உணவகத்தில் 61 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கும் நபர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும் என அறிவித்து, ஒரு லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனம், எல்.இ.டி. டிவி, மிதிவண்டி , வாஷிங் மெஷின், வெட் கிரைண்டர், மிக்ஸி, குக்கர், சோபா செட் உள்ளிட்ட 61 பொருட்களை வழங்கினார்.
அத்துடன் அஜித் நடித்த 61 திரைப்படத்தின் பெயர்களையும் எழுதி, அவரின் புகைப்படத்தை ஒட்டி ஆல்பம் ஆக தயாரித்து வருபவர்களுக்கு சிக்கன் பிரியாணி 60 ரூபாய்க்கு வழங்கினார்.
வங்கி கொள்ளையை மையமாகக் கொண்ட‘துணிவு’திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் காட்சி பழைய பத்து ரூபாய் நோட்டு போன்று வெளியானது. ஆகவே பழைய பத்து ரூபாய் கொடுத்து சிக்கன் பிரியாணி பெற்று கொள்ளலாம் என காளிதாஸ் ஆஃபர் வழங்கினார்.
‘துணிவு’திரைப்படம் பொங்கலுக்கு வெளிவருவதையொட்டி தனது வீரம் உணவகத்தின் இரண்டாவது கிளையில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அஜித்தின் மெழுகு சிலையை திறந்துள்ளார். அந்த உணவகத்துக்கு வரும் வாடிக்கையாளர்கள், ‘துணிவு’படத்தின் தோற்றத்தில் இருக்கும் அஜித்தின் மெழுகு உருவ சிலையைப் பார்த்து ஆச்சரியப்பட்டபடி செல்கின்றனர்.
