ராகுல் காந்தி ’இந்திய ஒற்றுமை பயண பாத யாத்திரை’ மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரை வரக்கூடிய 2023-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கும் உத்தர பிரதேச மாநிலத்திற்குள் நுழைய இருக்கிறது.
இந்த நிலையில் புதிய வகை கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, கொரோனா வழி காட்டு நெறிமுறைகளை பின்பற்ற முடியாவிட்டால், ராகுல்காந்தியின் இந்த யாத்திரையை நிறுத்துவது குறித்து பரிசீலனை செய்யுமாறு ராகுல் மற்றும் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் ஆகியோருக்கு மத்திய சுகாதாரதுறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா 21.12.2022 அன்று கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கு, ‘கொரோனா தொடர்பான அனைத்து வழிகாட்டுதல்களையும் காங்கிரஸ் கட்சி பின்பற்றும் என்றும், அதேவேளையில் எக்காரணத்தைக் கொண்டும் ராகுலின் பாத யாத்திரை நிறுத்த முடியாது என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர், ஜனநாயக அமைப்பில், ஒவ்வொரு கட்சிக்கும், தனி மனிதனுக்கும் கருத்தை வெளிப்படுத்தும் உரிமை உண்டு. காங்கிரஸ் யாத்திரையைக் கண்டு மத்திய பாஜக அரசு அச்சம் கொள்கிறது, அதனால்தான், ராகுலின் பாத யாத்திரையை தடுக்கும் பொருட்டு பல்வேறு உத்தரவுகள் வெளியிடப்படுகின்றன. கொரேனாவிற்கு பயப்படாதவர்கள், பாத யாத்திரைக்கு பயப்படுகின்றனர்.
நாங்கள் எந்த கடிதத்தையும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம். இந்த பாத யாத்திரையை நடத்த சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் இருந்து தேவையான அனுமதியை காங்கிரஸ் பெற்றுவிட்டது. பாஜக அரசு நிர்வாகத்தின் மூலம் அதைத் தடுக்க முயன்றால் ஜனநாயக அமைப்புகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலையிருக்கும்.’’ என அதிரடியாக தெரிவித்து பரபரப்பை கிளப்பி இருக்கிறார் சல்மான் குர்ஷித்.
