நெல்லை மாவட்டத்தில் உள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் மூலவர் மீது மார்கழி மாதத்தில் மட்டும் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்ச்சி நடந்தது.
தமிழகத்தில் உள்ள பல கோயில்கள், பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை. இந்த கோயில்களில் ஏதேனும் ஒரு சிறப்பம்சம் இருக்கும்படியாக அக்காலத்து மன்னர்கள் கட்டி வைத்துள்ளனர். குறிப்பாக தஞ்சை பெரிய கோயிலின் கோபுரம் தரையில் விழாபடி வடிவமைத்து கட்டப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி பல்வேறு கோயில்களும் பல சிறப்புகளை கொண்டுள்ளது.
இந்நிலையில், பழமையான சிவன் கோயில்களில் ஒன்றாக நெல்லை மாவட்டம் உவரியில் உள்ள சுயம்புலிங்க சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு சுவாமி சுயம்புவாக தோன்றி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.
இந்த கோயில் வங்க கடலோரம் கிழக்கு திசை நோக்கி உள்ள இந்த கோயில், சுமார் 1000 ஆண்டுகள் பழமையும், பெருமையும் கொண்டது. ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் சூரிய ஒளிக்கதிர்கள் நேரடியாக மூலவர் சுயம்புலிங்கத்தின் மீது விழும்படி, கோயிலை கட்டி வைத்துள்ளனர்.
இந்நிலையில், மார்கழி மாத பிறப்பையொட்டி நேற்று அதிகாலையில் கோயில் திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகம், உதய மார்த்தாண்ட பூஜை உள்பட பல பூஜைகள் நடந்தன. காலை 6.40 மணியளவில் சூரிய ஒளி கதிர்கள் கோயிலின் முதன்மை வாயில் வழியாக மூலவர் சுயம்புலிங்கத்தின் மீது விழும் அபூர்வ நிகழ்ச்சி நடந்தது. சுமார் 10 நிமிடங்கள் அந்த சூரிய ஒளிக்கதிர் இருந்தது. இதனை, ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பார்த்து, ‘சிவாய நம’ என கோஷமிட்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் சூரிய பகவானே நேரில் வந்து உவரி சுயம்புலிங்கத்தை வணங்குவதாக இங்கு வரும் பக்தர்கள் கூறுகின்றனர். மேலும் பல்வேறு கோயில்களில் சூரிய ஒளி சுவாமி மீது விழும் நிகழ்வு குறிப்பிட்ட நாட்களில் நடைபெறும். ஆனால் உவரியில் உள்ள சுயம்புலிங்க சுவாமி கோயிலில் மட்டும் ஒரு மாதம் முழுவதும் மூலவர் மீது சூரிய ஒளிக்ததிர்கள் படரும் நிகழ்வு நடப்பது தனிச் சிறப்பு.