அதிமுக மாவட்டச் செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தை வரும் 21-ந்தேதி நடத்த முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் முடிவு செய்துள்ளார். இதற்கான அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம் தற்போது உறுப்பினராக கிடையாது. அவருக்கும், அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கட்சி முழுமையாக எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த நிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் கூட்டி இருப்பது புதிய கட்சி தொடங்குவதற்கான முன்னோட்டமாக இருக்கலாம். அதற்கான நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக இந்த கூட்டத்தை கூட்டலாம். ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவுக்கு திரும்பி வர வாய்ப்பே இல்லை. அதே நேரத்தில் அவருக்கு வேறு வழியும் இல்லை என்றார்.
மேலும் இதுகுறித்து கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், “அதிமுகவில் 1 லட்சம் கிளைகள் உள்ளன. இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் அவரது கட்டுப்பாட்டில்தான் உள்ளனர். பொதுக்குழுவிலும் அதற்கான அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஓ. பன்னீர்செல்வம் பொதுக்குழுவை கூட்டுவதால் அரசியல் ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் எடப்பாடி பழனிசாமிக்கு எந்த பாதிப்பும் இல்லை” என்றார்.
