டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சர்வர்கள், சீனா ஹேக்கர்களால் முடக்கப்பட்டு, மீட்கப்பட்டது. தற்போது, பாதுகாப்புடன் சர்வர் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், முக்கிய அரசியல் தலைவர்கள், உயர் அதிகாரிகள், நீதிபதிகள், பொதுமக்கள் உள்பட ஆண்டுக்கு சுமார் 38 லட்சம் பேர் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெறுகின்றனர். இங்கு, டாக்டர்கள் முன்பதிவு ரசீது வழங்குவது, நோயாளிகள் மற்றும் மருத்துவப் பிரிவுகளுக்கு இடையே பரிசோதனை முடிவுகளை வழங்குவது உள்பட அனைத்து பணிகளும் ஆன்லைன் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்த தகவல்கள் அனைத்து, கம்ப்யூட்டர் மூலம் 100 சர்வர்களில் சேமிக்கப்பட்டுகின்றன.
இதையொட்டி, கடந்த மாதம் 23ம் தேதி, எய்ம்ஸ் மருத்துவமனையின் 5 சர்வர்கள் திடீரென முடங்கின. அதனை ஆய்வு செய்தபோது, ஹேக்கர்கள் மூலம் முடக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக, இணைய பயங்கரவாத பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, டெல்லி சைபர் பிரிவு போலீசார், அனைத்து சர்வர்களையும் ஆய்வு செய்து, அதில் உள்ள அனைத்து தகவல்களையும் மீட்டனர்.
இதுகுறித்து நாடாளுமன்றத்ததில் காங்கிரஸ் எம்பி சசிதரூர், கேள்வி எழுப்பினார். அப்போது அவர், நமது சர்வர்களை முடக்கியது யார், அவர்களின் நோக்கம் என்ன, எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தியது என்பது தெளிவாக தெரியவில்லை என குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில், ‘எய்ம்ஸ் மருத்துவமனை சர்வர்களை முடக்கியது சீன ஹேக்கர்கள்; எனவும், தற்போது அவை மீட்கப்பட்டு, லட்சக்கணக்கான நோயாளிகளின் தகவல்கள் பாதுகாப்புடன் இருக்கின்றன’ என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
