உலக அளவில் அதிக ரசிகர்களைக் கொண்ட விளையாட்டு கால்பந்து என்பது அனைவருக்கும் தெரியும். இந்த வகையில் இன்று (18.12.2022) இரவு அர்ஜென்டினா, பிரான்ஸ் அணிகள் நேருக்கு நோர் மோத உள்ள இறுதிப் போட்டியில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் வியாபித்திருக்கிறது. கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் இறுதிப் போட்டியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
உலக கோப்பை 22-வது கால்பந்து போட்டி கத்தாரில் நவம்பர் மாதம் 20-ம் தேதி பிரமாண்டமாக தொடங்கியது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி முதல் சுற்றுடன் மூட்டை முடிச்சை காட்டிக்கொண்டு வெளியேறியது.
ரசிகர்களின் பயங்கர எதிர்பார்ப்புடன் இருந்த முன்னணி அணியும், 5 முறை சாம்பியனுமான பிரேசில் கால் இறுதியில் குரோஷியாவிடம் சரணடைந்தது. லீக் சுற்றுகள், நாக் அவுட் சுற்றுகளின் முடிவில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் இறுதிப்போட்டியில் அடியெடுத்து வைத்துள்ளது பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளன.
இந்த நிலையில், உலக கோப்பை வெற்றி மாலை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி போட்டியில் பிரான்சும், அர்ஜென்டினாவும் இன்று இரவு (18.12.2022) லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் களம் இறங்குகின்றன. உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் இந்த இறுதிப் போட்டியில் யார் வெற்றி பெற்றாலும் அது அவர்கள் வெல்லும் 3-வது உலகக் கோப்பையாக அமையும். எந்த அணி வெற்றி பெற போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்.
மெஸ்சியின் கடைசி உலக கோப்பை போட்டி இது என்பதால் கோப்பையை கையில் ஏந்துவாரா என அர்ஜென்டினா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு ரூ.342 கோடி பரிசு வழங்கப்பட உள்ளது.
