“அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும்” என்று உச்சநீதிமன்றம் இன்று (பிப்.23) தீர்ப்பளித்துள்ளது.
அ.தி.மு.க. பொதுக்குழுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் உள்ளிட்ட அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சய் குமார் அமர்வு இன்று (பிப்.23) காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதில், கடந்த 2022- ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும். அந்த பொதுக்குழுவில் அ.தி.மு.க. இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானது செல்லும் என தீர்ப்பு வழங்கியுள்ள நீதிபதிகள், உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர். அத்துடன், அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதிச் செய்துள்ளனர்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, அ.தி.மு.க. கட்சி எடப்பாடி பழனிசாமி வசமானது. அதைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதும் பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் தீர்ப்பைக் கொண்டாடி வருகின்றனர்.
